நாட்டின் பல பகுதிகளில் தேவதாசி முறை தொடர்வதாக தெரிய வந்துள்ள செய்திகளால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள உள்துறை அமைச்சகம், பெண்களின் மரியாதையை குலைக்கும் இவ்வகையான பழக்க வழக்கங்களை தொடர்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் “பாரம்பரிய பழக்க வழக்கங்கள் என்ற பெயரில் சில குறிப்பிட்ட சமூக குழுக்களிடையே, தற்போதும் தேவதாசி முறை பழக்கத்தில் இருப்பதாக , பொது நல மனுக்கள் மூலமும், ஊடக செய்திகள் மூலமும் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
தேவதாசி முறை என்பது மனிததன்மையற்றது என்றும் பெண்களின் மாண்பை குறைக்கும் கீழ்த்தரமான செயல் என்றும் குறிப்பிட்டுள்ள உள்துறை அமைச்சகம், தேவதாசி முறையை முற்றிலும் ஒழிப்பது என்பது அறிவிப்புகளில் மட்டுமல்லாது செயல்களிலும் தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
“தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி, ஜனாதிபதி கையெழுத்திற்காக காத்திருக்கின்ற வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தில் தேவதாசி முறையினை ஒழிக்கவும், இத்தொழிலில் ஈடுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கவும் சட்டத்திருத்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளது” என்கிறார் சமூக செயல்பாட்டாளர் முருகப்பன் ராமசாமி .