மும்பையில் இருந்து வெளிவரும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான “காங்கிரஸ் தர்ஷனி”ல் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவின் தந்தை ஒரு பாசிஸ்ட் ராணுவ வீரர்; காஷ்மீர் விவகாரத்தில் ஜஹர்லால் நேரு தவறு செய்தார் என்ற விமர்சனங்களை முன்வைத்து கட்டுரை வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் 131-வது நிறுவன நாள் இன்று கொண்டாட படுகிறது. இதை ஒட்டி மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான “காங்கிரஸ் தர்ஷனி”ல் சிறப்பிதழ் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் சோனியா காந்தியின் தந்தை, இத்தாலி பாசிஸ்ட் ராணுவத்தில் வீரராகப் பணியாற்றியவர் என்று கடுமையாக சாடபட்டுள்ளது.
அதே போல் ஜவஹர்லால் நேரு, சர்வதேச விவகாரங்களில் சர்தார் வல்லபாய் படேலின் கருத்துகளை புறக்கணித்தார் என்றும் இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நீடித்து வந்தது என்றும் குறிப்பிட்டுள்ளதுடன் படேலின் கருத்துகளை நேரு கேட்டிருந்தால் காஷ்மீர், சீனா, திபெத், நேபாளம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்திருக்கும் என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றும் மும்பை காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய் நிருபம் இதுகுறித்து கூறும் போது “ஒரு ஆசிரியர் அனைத்து கட்டுரைகளையும் படிப்பது இயலாத ஒன்று என்றும் இதைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது” என்றும் மழுப்பியுள்ளார்.