“ஜல்லிக்கட்டு பிரச்சினையில் மத்திய அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று உண்ணாவிரதத்தை ஒத்தி வைப்போம்” என திமுக தலைவர் மு. கருணாநிதி அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது என்று உச்ச நீதி மன்றம் 7-5-2014 அன்று தீர்ப்பளித்ததோடு, கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தையும் உச்ச நீதி மன்றம் ரத்து செய்து விட்டது. கடந்த ஆண்டு இந்தத் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து 12-1-2015 அன்று அதுபற்றி நான் அறிக்கை விடுத்தேன். ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு வழி வகுக்க வேண்டிய அ.தி.மு.க. அரசோ கடந்த ஓராண்டு காலமாக இதைப் பற்றி வாய் திறக்காமல் செயலற்று இருந்தது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தும் விழாக் குழுவினர் என்னையும், கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலினையும் 18-12-2015 அன்று நேரில் சந்தித்து பேசியதையொட்டி, அவர்களது வேண்டுகோளையும், உணர்வுகளையும் மதித்தும்; ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு விதிக்கப்படும் தடையினால் ஏற்படும் சட்டம் – ஒழுங்கு விளைவுகளை எண்ணிப் பார்த்தும்; தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் அடையாளத்தைக் காப்பாற்றுவதற்காகவும்; மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்சினையிலே உடனடியாகத் தலையிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அவசியம் செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி, மதுரை மாவட்டத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 28-12-2015 அன்று ஜல்லிக்கட்டு விழாவினை ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வந்த அலங்காநல்லூரில் உண்ணாவிரதம் மேற்கொள்ளவும், அதிலே அனைத்துக் கட்சியினரும் பங்கு பெற வேண்டுமென்றும் 18-12-2015 அன்றே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. அரசு எல்லாவற்றையும் போல, இந்தப் பிரச்சினையிலும் முன்கூட்டியே முயற்சி எடுத்து உச்ச நீதிமன்றத்தில் முறையான அனுமதியைப் பெற்றுத் தரத் தவறி விட்டது. மக்களை ஏமாற்றுவதற்காக முயற்சி எடுப்பது போல, பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம், அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறோம், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறோம் என்று நொண்டிச் சமாதானங்களைச் சொல்லி, அறிக்கைகள் விட்ட போதிலும், அ.தி.மு.க. அரசு தமிழ் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற உண்மையான நோக்கத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் அந்தப் பகுதி மக்களை ஏமாற்றும் நோக்கத்தோடு, முதலமைச்சர் ஜெயலலிதா நாடாளு மன்றக் கூட்டத் தொடர் முடிகிற நாளன்று, பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். உண்மையிலேயே அதிலே அக்கறை இருந்திருந்தால், முன்கூட்டியே பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்க வேண்டாமா?
28-1-2015 அன்று அலங்காநல்லுhரில் கழகப் பொருளாளர், மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜல்லிக்கட்டு விளையாட்டை வலியுறுத்தி, உண்ணாவிரதம் நடைபெறும் என்று 18-12-2015 அன்று செய்தியாளர்களிடம் கூறப்பட்ட பிறகு, 23ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
23-12-2015 அன்று மத்திய அமைச்சர், திரு. பொன். இராதாகிருஷ்ணன் தொலைக் காட்சிகளில் ஜல்லிக்கட்டு பற்றி அளித்த பேட்டியைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சருக்கு நான் எழுதிய அவசரக் கடிதத்தில் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு எவ்வித இடையூறுமின்றி நடைபெற பிரதமரைச் சந்தித்து தேவையான முயற்சிகளை உடனே மேற்கொள்ள வேண்டு மென்று வலியுறுத்தியிருந்தேன். அந்தக் கடிதத்திற்கு அன்றிரவே பதில் எழுதிய மத்திய இணை அமைச்சர்,
“ஜல்லிக்கட்டை நடத்த தாங்கள் எடுத்த முயற்சிகள் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். தமிழர்களின் பண்பாட்டு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை மீண்டும் நடத்த வேண்டும் என்று கடந்த ஓராண்டுக் கும் மேலாக தொடர்ந்து நான் முயன்று வருகிறேன். நேற்றையதினம் (22-12-2015) திரு. பிரகாஷ் ஜாவ்டேகர் அவர்கள் தனது துறையைச் சார்ந்த அதிகாரி களை அழைத்து, ஜல்லிக்கட்டை நடத்த எந்த வழிமுறைகளைக் கையாளலாம் என்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். 23-12-2015 அன்று ஜல்லிக்கட்டு குழுத் தலைவர் ராஜசேகர் அவர்களோடு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அவர்களைச் சந்தித்து, ஜல்லிக்கட்டை ஜனவரி 2016இல் தைப்பொங்கல் அன்று நடத்த அனுமதி வேண்டுமென்று வலியுறுத்தினேன். கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் வருகின்ற ஜனவரி மாதம், தமிழர் திரு நாளாம் தைப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அனுமதி பெற்று விடுவோம் என்கின்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவை அனைத்திற்கும் நமது பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் முழு ஆதரவு உள்ளது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்”
என்று அவசரக் கடிதம் எழுதியதையும் இந்த நேரத்தில் நாம் மனதில் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் இவ்வாறு கடிதம் எழுதியுள்ள நிலையில் 28ஆம் தேதியன்று அலங்காநல்லூரில் நமது கழகப் பொருளாளர்,மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம் என்று கருதுகிறேன். ஜல்லிக்கட்டு விழாவினை நடத்த வேண்டு மென்று கோரி என்னைச் சந்தித்த குழுவினரும் மத்திய அரசின் இணை அமைச்சர் தெரிவித்துள்ள நம்பிக்கையை ஏற்று, இந்த முடிவினை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
திமுகவின் இந்த முடிவு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இப்படிச் சொல்கிறார்…