சமூக நீதி பாதையில் அரசியல் செய்வதாக சொல்லிக் கொள்ளும் ‘திராவிடக் கட்சி’ களான திமுக, அதிமுக கட்சிகளின் வளர்ச்சி சமூக நீதி முன்னோடி தலைவர்களான அம்பேத்கரையும் பெரியாரையும் மறுப்பதில் வந்து நிற்கிறது. மறைமுகமாக இதன் மூலம் இவர்கள் சொல்லும் செய்தி என்ன?
தலித்துகளை புறக்கணிக்கும் திமுக:
எல்லா சாதிகளும் ஒரே இடத்தில் வாழ வேண்டும் என்று சமத்துவபுரம் அமைத்த கருணாநிதியின் அரசியல், தலித்துகளை புறக்கணிப்பதில் வந்து நிற்கிறது. தருமபுரி இளவரசன் படுகொலையில் ஆகட்டும், கோகுல்ராஜ் கொலையில் ஆகட்டும் இவருடைய பேனா தானாகவே எழுதுவதை நிறுத்திக் கொள்ளும். விஷ்ணுப் ப்ரியா மரணம் தொடர்பான வழக்கு குறித்து குரல் கொடுக்கும் கருணாநிதியின் அறிக்கையில் அவர் விசாரித்த கோகுல்ராஜ் கொலை என்கிற வார்த்தைகள் கவனமாகத் தவிர்க்கப்படுகின்றன.
வன்னியர்கள், கொங்கு வேளாளர்களின் கணிசமான ஓட்டுகளின் முன்னிலையில் தலித்துகள் கழுத்தறுபட்டு கொல்லப்படுவதோ, தலித் ஒடுக்குமுறைகளோ, சமூக நீதியோ துட்சம்தான். அந்த வகையில் அம்பேத்கரின் 125 வது பிறந்த நாளுக்கு கருணாநிதி வாழ்த்து சொல்லக்கூட தயங்குகிறார். அம்பேத்கர் சிலைகள் வளையம் போட்டு பாதுகாக்கப்படுவதையும் கருணாநிதி அம்பேத்கர் புறக்கணிப்பையும் நூலாக இணைப்பது சாதி ஓட்டரசியல்.
இந்துத்துவத்தின் திராவிட முகம் அதிமுக:
பெயரளவில் மட்டும் திராவிடத்தை சுமந்துகொண்டிருக்கும் அதிமுக, பெரியாரை புறக்கணிப்பது ‘இயல்பான’ ஒன்று. பெரியார் வாழ்நாள் முழுதும் எதிர்த்து வந்த பார்ப்பனீய குணம் அதிமுகவுடையது. குறிப்பாக ஜெயலலிதா, அதிமுகவை தனதாக்கிக் கொண்டதிலிருந்து அதிமுகவில் பார்ப்பனமயமாக்கல் ஆரம்பமானது. தன்னை ஒரு பாப்பாத்தி என்று பெருமைப் பட்டுக் கொண்ட ஜெயலலிதா, அதை ஒவ்வொரு கட்டத்திலும் நிலைநிறுத்தினார்.
வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் காலில் விழ வைப்பது, தனக்காக தொண்டர்களை கோயில் கோயிலாக ஏறி இறங்க வைப்பது, சுருக்கமாகச் சொல்லப்போனால் அடிமைகளை உருவாக்குவது என தன்னைத் தவிர அத்தனை பேரையும் அடிமைகளாகப் பார்க்கும் இந்துத்துவத்தின் வர்ணாசிரம தர்மத்தை அதிமுகவில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. பெரியாரின் செயல்பாடுகள் இதற்கு நேரெதிரானவை என்பதால் ஜெயலலிதா பெரியாரை புறக்கணிப்பதில் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆளும் மாநிலத்தின் முதல்வராக, அம்மாநில நலனுக்காக உழைத்த ஒரு தலைவருக்கு மரியாதை செலுத்துவதில் என்ன கொள்கை பிணக்கு வந்துவிடப்போகிறது? பெரியாரைவிட முத்துராமலிங்க தேவரின் தேவை ஜெயலலிதாவுக்கு உள்ளதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
திராவிடக் கட்சிகளின் சுயநல அரசியல் வாழ்வு இப்போது மதவாத, சாதிய அடிப்படைவாதத்துக்கு சென்று கொண்டிருப்பதைத்தான் இந்த அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் உணர்த்துகின்றன.