கடந்த மாதம் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அடையாறு ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருக்கும் சென்னை மியாட் மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளம் புகுந்ததால் மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மருத்துவமனையின் ஜெனரேட்டர் அறையும் நீரில் மூழ்கியது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவில் 18 நோயாளிகள் உயிரிழந்தனர். இதுகுறித்து மியாட் மருத்துவமனை நிர்வாகம் மீது அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜோதிலிங்கம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மியாட் மருத்துவமனையில் 18 நோயாளிகள் உயிரிழந்தது குறித்து மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மேல் முறையான விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணை முறையாக நடைபெறாமல் இருந்தால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.