(அர்ச்சகர் வழக்கில் பார்ப்பனியத்தை தந்திரமாக பாதுகாக்கும் அம்சங்களை கொண்ட மழுப்பலான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. இதனை கண்டித்து 17.12.2015 அன்று அண்ணாசாலையில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன் வெளியிட்ட அறிக்கை.)
என் சொந்த ஊர் திருவண்ணாமலை. நான் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று 2006 இல் திமுக அரசு அரசாணை பிறப்பித்தது. நானும் என்னைப்போன்று ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட பலரும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தோம்.எங்கள் சங்கத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் வேறு நல்ல வேலையில் இருந்தார்கள்.அவர்கள் அந்த வேலைகளை ராஜினாமா செய்து விட்டு இந்தப் பயிற்சிப்பள்ளியில் சேர்ந்தார்கள்.
நீயெல்லாம் அர்ச்சகராகலாம்னு கனவு காண்றியா என்று பார்ப்பன அர்ச்சகர்கள் எங்களை கேலிப் பேசினார்கள். அப்புறம் எங்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளித்த ஆசிரியர்களைத் தாக்கினார்கள். சங்கத்தை கலை,நல்ல வேலை வாங்கித் தருகிறேன் என்று எனக்கு ஆசை காட்டினார்கள். இந்து முன்னணிக்காரர்கள் திருவண்ணாமலையில் என்னை அடித்தார்கள்.
இது போல பல துன்பங்களையும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டுதான் நானும் மற்ற மாணவர்களும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்தினோம். எட்டு ஆண்டுகள் இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டது.
எங்கள் கையில் சான்றிதழ் இருந்தது. நாங்கள் தீட்சை பெற்றிருந்தோம். இருந்தாலும் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக பல மாணவர்கள் கூலி வேலைக்குப் போகவேண்டியதாயிற்று.
எல்லாவற்றையும் சகித்துக் கொண்டோம். கடந்த 8 ஆண்டுகளில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தோடு சேர்ந்து பல போராட்டங்களை நடத்தினோம். உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று நம்பினோம். அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது உணர்கிறோம்.
சாதித் தீண்டாமையையும் மொழித்தீண்டாமையையும் பாதுகாப்பதுதான் இந்து மதம் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் இப்போது புரிந்து கொண்டோம். நந்தனார் முதல் வள்ளலார் வரை பலரை பார்ப்பனியம் காவு கொண்டிருக்கிறது என்று சொல்வார்கள். அப்போதெல்லாம் நாங்கள் அதை நம்பியதில்லை. இப்போது புரிந்து கொண்டோம்.
ஆகமங்கள், வடமொழி மந்திரங்கள், பூஜை முறைகள் போன்ற பலவற்றையும் கற்றோம். உருத்திராட்சம் அணிந்தோம்.தீட்சை பெற்றோம். புலால் உணவை மறுத்தோம். தகுதியில் பார்ப்பன அர்ச்சகர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்று நிரூபித்தோம்.
பார்ப்பனராகப் பிறந்தால் எந்தத் தகுதியும் தேவையில்லை. பார்ப்பனரல்லாதவராக, தாழ்த்தப்பட்டவராக இருந்தால் எத்தனை தகுதி இருந்தாலும் பயனில்லை என்பதை இப்போது அனுபவத்தில் உணர்கிறோம்.
எனவே, இந்த உருத்திராட்சத்தை, தீட்சையை, அர்ச்சகர் கோலத்தைக் களைகிறேன். பெரியார் அம்பேத்கரின் முன்னிலையில் உங்கள் அனைவரின் முன்னிலையில் சுயமரியாதையை அணிந்து கொள்கிறேன்.
இனி, சாதியை ஒழிப்பதற்கும் சுயமரியாதையை நிலைநாட்டுவதற்கும் பாடுபடுகின்ற அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளேன்.
– வா. ரங்கநாதன்,
தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்.