ஆவணங்கள் இல்லாவிட்டாலும் நிவாரணம் வழங்க வேண்டும்: சீமான்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் மக்களுக்கு உதவும் வகையில் மகளீர் சுய உதவிக்கடன்களையும் விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்யமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழகத்தின் தலைநகர் சென்னையையும்,கடலூர் மாவட்டத்தையும் அழித்துக் கோரத்தாண்டவம் ஆடியிருக்கிற பெரும் மழை வெள்ளப் பாதிப்பில் இருந்து இன்னமும் மக்கள் மீண்டு வர இயலாத் துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள். உறைவிடம், உடை, பொருட்கள், ஆவணங்கள் என அனைத்து அடையாளங்களை இழந்து மக்கள் நிர்கதியாய் நிற்கிறார்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், மாந்தநேயம் கொண்ட தனிநபர்களும், மனிதநேயமிக்கக் கட்சிகளும், தன்னலம் பாராத சிறு சிறு அமைப்புகளும் மக்களின் துயரில் பங்கேற்று அவர்களுக்கு உதவி செய்து ஆறுதலாக இருந்து வந்தாலும் மக்கள் அடைந்துள்ள துயரங்களுக்கு, இழந்த இழப்புகளுக்கு இது போதாது. மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகின்ற நிவாரணப்பணிகள் பெருங்கடலில் கலந்த சில துண்டு பெருங்காயங்களாய் இருக்கின்றன.

இயற்கைப் பேரிடரில் சிக்கி சின்னாபின்னமாய்ச் சிதைக்கப்பட்டிருக்கிற மக்களை மீட்க ஒட்டுமொத்த தமிழகமும் ஒருமித்த மனதோடு கரம் கோர்த்து பணியாற்ற வேண்டிய மாபெரும் கடமை தற்போது எழுந்திருக்கிறது. மழை சற்றே ஓய்ந்த போதிலும் இன்னமும் சென்னை நகரத்து பல வீதிகளில் வெள்ள நீர் வடியாமல் இருக்கிறது. தேங்கி இருக்கிற வெள்ள நீரோடு கழிவு நீரும் கலப்பதால் நோய்த் தொற்று அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது. பல இடங்களில் மக்கள் முற்றிலுமாய் வீடு, பொருட்கள் என அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள். எனவே மக்களின் துயரினையும், இழப்பினையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு செய்து வருகிற நிவாரணப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிற மக்களின் வசிப்பிடங்களுக்கே அரசு ஊழியர்கள் சென்று குடும்ப அட்டை, அரசு ஆவணங்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

மகளீர் சுய உதவிக்குழுக்களில் கடன் பெற்றுத் தற்போது அக்கடனை திருப்பி அடைக்க முடியாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிற பெண்களின் துயர் நிலையைக் கருத்தில் கொண்டு மகளீர் சுய உதவிக்குழுக்கள் மூலமாகத் தமிழக அரசு வழங்கி உள்ள கடன் தொகையை முழுமையாகத் தள்ளுபடி செய்யவேண்டும். மேலும் மழை வெள்ளத்தால் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தைப் பொறுத்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிற விவசாயக்கடனை தமிழக அரசு மக்களின் துயர் நிலை கருதி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு தனியார் பள்ளி நிறுவனங்களும் பள்ளிக் கட்டணங்களைப் பெருமளவுக் குறைத்துக் கொண்டு மக்களைத் துயர் இருட்டில் இருந்து காத்திட உதவிட வேண்டும்.

அரசு ஆவணம் ஏதாவது இருந்தால் மட்டுமே அரசு மூலம் கிடைக்கக்கூடிய நிவாரண உதவிகள் கிடைக்கிற ஒரு சூழல் சென்னையில் தற்போது நிலவி வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் தரைத்தளங்களில் வசித்து வந்தவர்கள், தாழ்வான நிலப்பகுதிகளில் வாழ்ந்து வந்த பல குடும்பங்கள் வெள்ளத்தால் முழுவதுமாக முழ்கிப்போன வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களையும் இழந்திருக்கிறார்கள். மேலும் வெள்ளத்தில் சிக்குண்டு பிழைத்த பலருக்கு எவ்வித அரசு ஆவணமும்,அடையாள ஆவணங்களும் இல்லாத நிலை இருக்கிறது. எனவே தமிழக அரசு மக்களின் நிலை உணர்ந்து அரசு ஆவணங்கள் இல்லாவிட்டாலும் கூட அவர்களுக்கு உரிய நிவாரணங்கள், அரசு ஆவணங்களைப் புதிதாக உருவாக்கித் தருதல் ஆகிய உதவிகளை எவ்விதமான தடையுமின்றி வழங்க வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமை ” என்று கூறியிருக்கிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.