#BeepSong: இளையராஜாவிடன் கேள்வி கேட்பது தவறா?

செந்தில் வேல்
இசைத்துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சர்ச்சை குறித்து, அதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், அது குறித்து அந்த துறையின் ஞானியாக நான் உட்பட நம் அனைவரும் கொண்டாடும் ஒருவரின் கருத்தை பெற வேண்டும் என்று ஒரு செய்தியாளர் நினைப்பதில் என்ன தவறு ? அவர் அந்த கேள்வியை அந்த இடத்தில் எழுப்பியதை இசைஞானி விரும்பவில்லையெனில், இந்த இடத்தில் இந்தக் கேள்வியை நான் தவிர்க்கிறேன்..என்றோ அல்லது அது குறித்து கருத்து ஏதும் கூற விரும்பவில்லை என்று கூறியிருக்கலாம். மாறாக உனக்கு அறிவிருக்கிறதா என்று ஒரு இளைஞனை அத்தனை பேர் முன்னிலையில் கேட்பதும், கேள்வி கேட்பவருக்கான தகுதி குறித்து கேள்வி எழுப்பியதும் அந்த இளைஞனை எந்த அளவிற்கு பாதிப்புக்குள்ளாக்கியிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில் இந்த கேள்வி தேவையா என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது…

ஒரு வாதத்திற்காக கேட்கிறேன், தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி குறித்தோ இன்ன பிற அரசியல் நிலவரங்கள் குறித்தோ தமிழக முதலமைச்சரோ, இன்ன பிற அரசியல் கட்சித் தலைவர்களோ செய்தியாளர்களை சந்தித்தால் அப்போது மழை வெள்ளச் சேதம் குறித்து கேள்வி எழுப்பக் கூடாதா ? பிரதமர் , உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் தமிழகத்திற்கு ஏதேனும் முக்கிய நிகழ்வுகளுக்கு வரும் போது செய்தியாளர்களைச் சந்தித்தால், அந்த விழா குறித்து மட்டும்தான் கேட்க வேண்டுமா ? அப்படியெனில் ஈழம், கூடங்குளம், முல்லை பெரியாறு, காவிரிப் பிரச்னை போன்றவை குறித்து பிரத்யேக செய்தியாளர்கள் சந்திப்பை மத்திய, மாநில அரசுகளின் அங்கமாக இருந்த, இருக்கின்ற கட்சிகளை தலைமை செய்வது வழக்கமில்லை. வேறு ஏதேனும் சந்தர்ப்பங்களின் போதுதான் இதுபோன்ற கேள்விகளையும் முன் வைக்க வேண்டியுள்ளது.

எல்லா செய்தியாளர்களும், எல்லா சூழலிலும் மிகச் சரியாகத்தான் நடக்கிறார்கள் என்று நான் ஒரு போதும் சொல்ல மாட்டேன்..மிகப்பெரிய தவறுகள் நடப்பதுண்டு.. அதை செய்தியாளர்கள் நிச்சயம் திருத்திக் கொள்ள வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மரியாதைக்குரிய இசைஞானியிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அவர் அதற்கு அளித்த பதில்களும் இந்த வகையில் சேர்ந்தவை அல்ல… சற்றே மென்மையாக தன் கருத்தை பதிவு செய்திருக்கலாம் இசைஞானி.

கட்டுரையாளர் நியூஸ் 7 தொலைக்காட்சியின் கேள்வி நேரம் விவாத நிகழ்ச்சியின் தொகுப்பாளர்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.