சுப. உதயகுமாரன்

ஒரு ஊர்ல ஒரு ராஜாவும், ஒரு ராணியும் இருந்தாங்களாம். அந்த ராஜாவுக்கு விதவிதமா டிரஸ் போட்டுட்டு கண்ணாடில பாத்துக்கறதும் ஊர சுத்தி வர்றதும் ரொம்பப் புடிக்குமாம். இதப் பாத்து மக்கள் எல்லாம் செல்ஃபி ராஜா, செல்ஃபி ராஜான்னு அவர கூப்பிட்டாங்க. வடக்கூர் செங்கோட்டையிலதான் செல்ஃபி ராஜா தர்பார் நடந்துச்சு. ஆனா அவரு பெரும்பாலும் வெளிநாட்டுலதான் இருப்பாரு.
ராஜா மாதிரியே ராணிக்கும் ஒரு பிரச்சினை. என்னான்னா அவுங்க படத்தைய அங்கங்க வெச்சுப்பாங்க. அரசகட்டளைய எல்லாபேரும் மதிக்கமாட்டாங்கனு ராணிக்கு நல்லாத் தெரியும். அதனாலே லட்சக் கணக்குல தன் படத்தையே ஸ்டிக்கர் அடிச்சு அவுங்க அடிமைகள்கிட்ட குடுத்து ஒரு எடம் விடாம ஒட்டுங்கடான்னுட்டாங்க. அதுனால நாட்டு மக்கள்லாம் அவுங்கள ஸ்டிக்கர் ராணி, ஸ்டிக்கர் ராணின்னு கூப்பிட்டாங்க. ஸ்டிக்கர் ராணி தெக்கூர் அக்ரஹாரத்திலேர்ந்து தர்பார் நடத்தினாங்க.
வாய்ப்பான ஒரு நேரத்துல வடக்கூர் செங்கோட்டைய ஸ்டிக்கர் ராணி பிடிக்க முயற்சி பண்ணுனப்போ, ராஜாவுக்கும் ராணிக்கும் பிடிக்காமப் போயிடுச்சி. அதுலேர்ந்து அம்பத்திரண்டு இஞ்ச் செஸ்ட வெச்சுக்கிட்டு ஒலகம் பூரா சுத்துற செல்ஃபி ராஜா மறந்தும் தெக்கூர் பக்கம் வர்றதில்ல. அப்படியே செத்த வீடு, பெத்த வீடுன்னு அவரு எப்பவாச்சும் வந்தாலும், ஸ்டிக்கர் ராணி அவர கண்டுக்கறதுல்ல. செல்ஃபி ராஜா ஸீட்ட ஸ்டிக்கர் ராணி பிடிக்க முயற்சிபண்ணி தோத்துப் போச்சுல்ல; இப்ப ஸ்டிக்கர் ராணி ஸீட்ட செல்ஃபி ராஜா பிடிக்க பிளான் போட்டுட்டிருக்காரு.
ஸ்டிக்கர் ராணிகூட ஒரு செல்ஃபி எடுத்துட்டா தெக்க நம்ப பேரு நிக்குமேன்னு செல்ஃபி ராஜா நெனச்சாக்க, செல்ஃபி ராஜா முதுகுல ஸ்டிக்கர் ஒட்டுறதுலயே ஸ்டிக்கர் ராணி குறிப்பா இருக்கிறாங்க. இப்படி வடக்கூருக்கும், தெக்கூருக்கும் ஒரே இஸ்க்.
அதுனால செல்ஃபி ராஜாக்கிட்ட ஏதாவது கேக்கணும்னா ஸ்டிக்கர் ராணி ஒரு கடிதத்தத் தட்டிவிடுவாங்க. ஆனா கடிதம் செல்ஃபி ராஜாக்கிட்ட போய் சேர்றதே இல்ல. கடிதத்துல என்ன வரும்னு அவருக்குத் தெரியும்ல. அதுனால கடிதத்த சுத்தி ஸ்டிக்கர் இருந்துச்சுன்னா, அப்படியே அத யமுனா நதியில போட்ருங்கடான்னு செல்ஃபி ராஜா ஸ்டாஃப் கிட்ட ஸ்டாண்டிங்க் இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்துட்டாரு.
ஸ்டிக்கர் ராணிக்கு கடிதம் எழுதிட்டோம்னு திருப்தி; செல்ஃபி ராஜாவுக்கு கடிதம் வந்து சேரலையேன்னு மகிழ்ச்சி. இப்படியாக இங்கயும் சுகம், அங்கயும் சுகம்னு கத சுகமா போய்ட்டிருந்துச்சு. பாவம் மக்களுக்குத்தான் சுகமே இல்லாமப் போச்சு.
அப்பப் பாருங்க தெக்கூர்ல ஒரு மழ பெஞ்சுச்சு. ஒங்கவூட்டு மழ எங்கவூட்டு மழ இல்ல அத்தன உலகத்து மழயும் அப்படியே பெஞ்சிச்சு. அதிகாரிங்க சொன்னத அக்ரஹாரம் கேக்கல்ல. அக்ரஹாரம் என்ன செய்யுதுன்னு அதிகாரிங்களுக்குப் புரியல. தெக்கூர்ல வெள்ளம்னா வெள்ளம், அப்படி ஒரு வெள்ளம். வெள்ளத்துல ஸ்டிக்கர் ஒட்டலையாடான்னு ஆத்தா வையுமுல்ல? அடிமைகள்லாம் பயத்துல இடுப்ப முறிச்சுக்கிட்டு மண்டையப் பிச்சுக்கிட்டு இருக்கறப்ப மக்கள்லாம் தண்ணிலப் பூட்டாங்க.
அப்பத்தான் வில்லன் என்ட்ரி ஆவுறாரு. ஸ்பெக்ட்ரம் தந்திரி, ஸ்பெக்ட்ரம் தந்திரின்னு ஒரு பெரிய மந்திரவாதி ஊருக்குள்ள இருந்தாரு. கண்ணுக்குத் தெரியாத காந்த அலைகள வெச்சு அப்பிடியே ஆளக் கவுப்பாரு. அள்ளிக் குவிப்பாரு. பெரிய பெரிய யுத்தத்தக்கூட பூன்னு ஊதி பொடிப் பொடியாக்குவாரு. இந்த ஸ்பெக்ட்ரம் தந்திரி செல்ஃபி ராஜாவ வெச்சு அக்ரஹாரத்தப் பிடிக்க ஒரு ஐடியா போட்டாரு.
செல்ஃபியின் ராஜாவே வருக!
ஸ்டிக்கர் ராணி ஆட்சியை கவிழ்க்க!!
அப்படீன்னு ஒரு முழக்கத்த மந்திரம் மாதிரி திரும்ப திரும்பச் சொல்லிட்டு, செல்ஃபி ராஜா வெள்ளத்துக்கு குடுத்த 1940 கோடி ரூபாவ “ஞாலத்தின் மாணப் பெரிது”ன்னுட்டாரு. செல்ஃபி ராஜாவுக்கு குல்ஃபி சாப்பிட்ட மாதிரி ஆகிப்போச்சு. “எந்திரிய்யா தந்திரி, எடுப்போம் ஒரு செல்ஃபி”ன்னுட்டாரு செல்ஃபி ராஜா.
ரெண்டு பேரும் எந்திரிக்கும்போதுதான் பிரச்சின புரிஞ்சுச்சு. செல்ஃபி ராஜாவோட காக்கி நிக்கரும், ஸ்பெக்ட்ரம் தந்திரியோட காக்கி அண்டர்வேரும் ஸ்டிக்கர்ல ஒட்டிக்கிச்சு.
ஸ்டிக்கர் கழண்டுச்சா? நிக்கர் கழண்டுச்சா?
வெள்ளித் திரையில் காண்க!
சுப. உதயகுமாரன், அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். இந்தப் பதிவு அவருடைய முகநூல் பக்கத்தில் வெளியானது.