விடுதலை புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கடந்த ஆட்சியில் தடை செய்யப்பட்ட எட்டு தமிழ் அமைப்புகள் மீது தடை விலக்கி கொள்ளப்பட்டது. கடந்த 20 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசு கெஜட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டாணியா தமிழ் அமைப்பு, கனடா தமிழ் காங்கிரஸ், ஆஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ், உலகத் தமிழர் பேரவை, தேசிய கனடா தமிழர்கள் கவுன்சில், தமிழ் தேசிய சபை, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய எட்டு அமைப்புகளின் தடை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
விடுதலை புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியதாக 16 அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷ அரசு, கடந்த மார்ச் மாதம் தடை விதித்தது. ஆனால், தற்போது ஆட்சியில் உள்ள சிறீசேனா தலைமையிலான அரசு எட்டு அமைப்புகள் மற்றும் 155 தனி நபர்கள் மட்டுமே தடை விதித்துள்ளது.
இந்த தடை விலக்கல் குறித்து பேசிய நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் மங்கல சமரவீரா, ‘நாட்டின் பிரிவினைக்கு தூண்டாத எவருடனும் அரசு பேச்சுவார்த்தைக்கு தயார். தடைவிலக்கப்பட்ட அமைப்புகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் எந்தவித தொடர்பில்லை. இந்த அமைப்புகள் தமிழர்களுக்கு ஆதரவாக மட்டும் செயல்பட்டு வருகின்றன’ என்று கூறினார்.