“இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிரான போரின்போது, திரிகோணமலை கடற்படைத் தளத்தில் ரகசிய சிறை செயல்பட்டது. அப்போதைய கடற்படைத் தளபதி வாசந்தா கரன்னகோடாவின் உத்தரவின்பேரில், அங்கு தமிழ்க் கைதிகள் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர்” என்று ஐ.நா. விசாரணைக் குழு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அக்குழு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளை வாசந்தா கரன்னகோடா மறுத்துள்ளார். இதுதொடர்பாக, கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,
“திரிகோணமலை கடற்படைத் தளத்திலுள்ள ரகசிய அறைகள், இரண்டாம் உலகப் போரின்போது பதுங்கு குழிகளாக பயன்படுத்தப்பட்டவை. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து, இலங்கை ராணுவத்துக்கு உதவ முன்வந்தவர்களை தங்க வைப்பதற்கே அந்த அறைகளைப் பயன்படுத்தினோம். மற்றபடி, அங்கு ரகசிய சித்திரவதை கூடங்கள் எதுவும் செயல்படவில்லை என்றார் வாசந்தா கரன்னகோடா. முன்னதாக, அவரைக் கைது செய்து, விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.